மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை ஓர்லி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹாஜி அலி தர்கா.
 
இந்த தர்கா 1431 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இஸ்லாமியர்களின் பாரம்பரிய புனித தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
 
இந்த தர்காவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
 
ஆனால் தர்கா நிர்வாகம் கடந்த 2012ஆம் ஆண்டு பெண்கள் தர்காவின் சன்னதிக்குள் வருவது புனிதத்தை கெடுப்பதகாவும், ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உள்ளே வருவதால் இஸ்லாமத்தில் புனிதத்திற்கு எதிரானது என்றும் கூறி பெண்கள் அனுமதிக்கு தடைவிதித்தது.
.
இதனை எதிர்த்து, பெண்களும் தர்காவின் மைய பகுதிக்குள் சென்று பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என பூமாதா பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
 
இதைத்தொடர்ந்து பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த நூர்ஜஹான் சஃபியா நியாஸ், ஜகியா சோமன் உள்ளிட்டோர் பெண்களை ஹாஜி அலி தர்காவில் நுழைய அனுமதிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
அந்த வழக்கில் தாங்கள் சில வருடங்களுக்கு முன்னர் அந்த தர்காவில் அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும், அண்மை வருடங்களாக தான் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கான தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை நிர்வாகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் கேட்டது. விசாரணை நடைபெற்று வரும்போதே, அக்டோபர் 24, 2016 அன்று ஹாஜி அலி தர்கா நிர்வாகம் பெண்களை அனுமதிப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
 
ஆனால் பெண்களை அனுமதிக்க சில வசதிகளை தர்காவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் , அதற்கு 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
 
அவர்களது கோரிக்கை ஏற்ற நீதிமன்றம், 4 மாதத்திற்குள் இதுதொடர்பான பணிகளை முடிக்க வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
 
இதன்பின்னர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே பெண்கள் அந்த தர்காவிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஹாஜி அலி தர்காவில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ளது
 
இப்போதைய நிலமை என்ன என்பது பெண்களுக்கு என தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் தர்காவின் சன்னதிக்குள் செல்லும்போது, தலையில் துணியை போர்த்தியபடி தான் செல்ல வேண்டும். துணிகள் இல்லையென்றால் அவர்களுக்கு தர்கா நிர்வாகம் சார்பில் தலை போர்த்திக்கொள்ள துணி வழங்கப்படும்.
 
அவற்றுடன் பூ மற்றும் ஒரு காகிதத்துண்டும் வழங்கப்படும். அதனை தர்காவில் இருக்கும் பணியாளரிடம் அவர்கள் வழங்க வேண்டும் என்பதே ஆகும் .