நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 17 நாட்களாக நடைபெற்று வந்த 42வது புத்தக காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
சென்னையில் 42வது புத்தக காட்சி கடந்த 4ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. புத்தக காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மொத்தம் 820 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டது. புத்தக காட்சியில் 10 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தலைப்பில் ஒன்றரை கோடி புத்தகங்கள் வைக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்களும், கலை உலகினரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 17 நாட்களாக நடைபெற்று வந்த 42வது புத்தக காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதுகுறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் கூறிய விவரம் வருமாறு ” கடந்த 4ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட புத்தக்காட்சி 17 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவடைந்தது.
17 நாட்கள் நடைபெற்ற இக்காட்சியில் மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 14 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளார்கள்.
புத்தக மதிப்பில் ₹18 கோடிக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது. 72 லட்சம் புத்தகங்களை வாசகர்கள் வாங்கியுள்ளார்கள். சொற்பொழிவுகள், குறும்படங்கள், உலகத் திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் தினமும் நடைபெற்றது.
மாட்டுப் பொங்கல் அன்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றார்கள். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நூல் உலா என்னும் தலைப்பில் தனி பேருந்துகளில் வருகை தந்து புத்தகக் காட்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள்.
புத்தகக்காட்சியின் நிறைவு நாளில் நீதிபதி ஆர்.மகாதேவன் நிறைவுப் பேருரையாற்றினார்.இவ்வாறு கூறினார். கடந்த ஆண்டு ₹15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. ஆனால், இந்த ஆண்டு ரூ.3 கோடி கூடுதலாக ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.