அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க ‘ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகாலமாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெளியானது. அதன்படி ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அல்லது ஒரு அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க ‘ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் அமைய இருக்கிறது. இதற்கான திட்டம் தயாராக உள்ளது என்றார்.
மேலும் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை புதிதாக கட்டிக்கொள்ள சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் குறித்து உத்தரப்பிரதேச அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா பேசுகையில், “மொத்தம் 3 இடங்களை தேர்வு செய்தோம். அதில் ஒரு இடம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த இடத்திற்கு நல்ல போக்குவரத்து வசதி உள்ளது. வகுப்பு வாத பிரச்சனைகள் வராது சட்ட ஒழுங்கும் அங்கும் சிறப்பாக உள்ளது. அயோத்தியின் மாவட்ட தலைநகரில் இருந்து 18 கி.மீ தூரத்தில் லக்னோ நெடுஞ்சாலையில் தனிபூர் கிராமத்தில் இந்த நிலம் உள்ளது” என்றார்.
இதனிடையே உத்தரப்பிரதேச அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ’14 கோசி பரிக்ரமா’ இடம் அயோத்தி நகருக்கு வெளியே அமைந்துள்ளது. அயோத்தில் திருவிழாக்களின் போது 42 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் கூடுவார்கள் என்றும் எனவே பரிக்ரமா எல்லைகளுக்கு அப்பால் மசூதிக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்று சாமியார்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவரும், ராம் ஜென்ம பூமி இயக்கத்தின் முதன்மை தலைவருமான உமா பாரதி ‘இது ராம ராஜ்ஜியத்துக்கான நேரம்’ என்று தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பின் போது முதன்மைக் காரணிகளாக விளங்கியவர்கள் என்ற பட்டியலில் உமா பாரதியின் பெயரும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான, அறிவிப்பு இப்போது வெளியான பின்னணியில் டெல்லி சட்டசபை தேர்தல் இருக்கிறது என்று, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, குற்றம்சாட்டியுள்ளார்.