பிகில் பட விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த பிகில் படம் ரூ. 300 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகியன. இந்நிலையில் பிகில் படத்தை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திரைத்துறையின் முக்கிய பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளரான அன்புச் செழியன் வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டில் இறங்கியது வருமான வரித்துறை. சென்னையில் மட்டும் இன்று 20 இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 221 படம் தொடர்பாக சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதன் அடிப்படையில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக நெய்வேலி என்எல்சி சுரங்கப்பகுதியில் நடைபெற்ற மாஸ்டர் பட ஷுட்டிங்கில் பங்கேற்றிருந்த விஜய்யிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விஜய்யை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வருகின்றனர் அதிகாரிகள்.

மேலும் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல் நடிகர் விஜய்க்கு சொந்தமான சென்னை கானாத்தூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதுதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.