திரையரங்குகளை 100% பார்வையாளர்கள் இருக்கைகளுடன் திறக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. இந்த படங்கள் வெளியிடப்படுவதால் திரையரங்குகள் 100% பார்வையாளர்கள் இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தமிழக அரசு இத்தகைய முடிவை எடுக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து 2020 டிசம்பர் 31 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. காணும் பொங்கல் பண்டிகை தினத்தன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து வகையான கூட்டங்களிலும், 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதித்து பிறப்பித்த உத்தரவு, சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் இன்னும் துவங்காத நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று (ஜனவரி 08) விசாரித்தது. அப்போது, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

100% இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது. 50% இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படுகிற தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அத்துடன் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள்,

மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கோடு, இந்த வழக்கையும் சேர்த்து மதுரை கிளையில் விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதுவரை இந்த தடை உத்தரவு தொடரும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது- மத்திய அரசு