தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
தீர்ப்பாயம் அமைத்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.