ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்த முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது.
 
இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த சிறப்பு உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
 
இதை எதிர்த்து அந்த நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்கலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
 
இதில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தன் வாதத்தில்,”ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல விதிமுறைகளை இந்த விவகாரத்தில் கடைபிடிக்கவில்லை. கழிவுகளை அகற்றுவதில் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை.
 
ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் சல்பரிக், காப்பர், ஜிப்ஸம் ஆகிய கழிவுகள் நிலத்தடி நீரை கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் எடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்கு இருக்கும் சூழலும் எதிர்மறையாக உள்ளது.
 
அதில்உண்மை தன்மை கண்டிப்பாக கிடையாது. அவர்கள் ஆலை பகுதியில் இருக்கும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஆகியவை எதையும் கணக்கீடு செய்யாமல் ஆய்வறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
 
அதை அடிப்படையாக கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆதனால் இதனை ஏற்க இயலாது. அதனால் தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பை கடுமையாக எதிர்த்து வாதிட்டார்.
 
இதே கோரிக்கையை முன்வைத்து தமிழக வழக்கறிஞர்கள் விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோரும் வாதிட்டனர்.
 
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஆலையை திறக்க அனுமதிக்கும்படி வாதிட்டார்.
 
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 7ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
 
இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.