தில்லியில் ஜெஎல்என் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசுகையில், இந்தியாவில் 24 மணி நேரத்தில் 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது.
ஆனால், சீனாவில், அதே 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இது எனது புள்ளிவிவரம் கிடையாது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் தாக்கல் செய்த புள்ளிவிவர கணக்கு.
இதன் வித்தியாசம் என்பது 111 மடங்கு இந்தியா வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பின் தங்கி உள்ளதாக அறியலாம்.
மேலும் அவர் பேசுகையில் இந்தியாவின் பெரும் செல்வம் சில தனி நபர்களின் கைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்களின் வசதிக்காக அவர்களின் கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
தொழிலதிபர்களுக்கு மட்டுமே பாஜக அரசு உதவுகள் செய்கிறது. ஆனால் கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதில்லை. மாணவர்களின் கல்விக் கடனை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய ராகுல், சர்வதேச கொள்கை மற்றும் மாணவர்களின் எண்ணங்களை குறித்து கவலைப்படுதில்லை. அவர்கள் தங்கள் கொள்கைகள் பற்றியே அக்கறை கொண்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு பெருமளவு குறைந்து விட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி அதிகரிக்கப்படும்.
ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு தீர்வு காணப்படாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வேலைவாய்ப்பின்மையை ஒரு பிரச்னையாக பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
வேலைவாய்ப்பு விவகாரத்தில் உண்மையில் பிரச்னை உள்ளது என்பதை அவர் ஏற்க வேண்டும். இதன் பிறகு அதில் கவனம் செலுத்த வேண்டும். இது தான் காங்கிரசின் கொள்கை. பாஜக ஆடசியில் வேலையின்மை அதிகரித்து உள்ளது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலைப் பற்றி ராகுல் பேசுகையில், வீரமரணம் அடைந்த துணை ராணுவப் படை வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து கிடைக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்வோம் என்றார் ராகுல்.
தில்லி காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.