மத்திய அரசு, வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது.
மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் கடந்த வாரம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்கள் புறக்கணிப்பு, சுங்கச்சாவடி முற்றுகை, ஒருநாள் உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், மத்திய அரசு, தனக்கு ஆதரவான பாஜக உறுப்பினர்கள் உள்ளிட்ட வேறு சில விவசாய அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பின்னர் அவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக செய்திகள் வெளியிட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளடன், மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
மோடி ஆட்சிக்காலம் முடியும் வரை போராடத் தயார்- விவசாயிகள் உறுதி