பேச்சுவார்த்தைக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துவரும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கடந்த 13-ம் தேதி ராஜ் நிவாஸ் முன்பு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தை துவங்கினர்.
அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 14-ம் தேதி துணை ராணுவம் குவிக்கப்பட்டது. கவர்னர் டெல்லி சென்ற நிலையிலும் முதல்வர், அமைச்சர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இன்று 5வது நாளாக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் 12 இடங்கள், காரைக்காலில் 3 இடங்கள், மாகே, ஏனாம் தலா 1 இடம் என 12 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதை தொடர்ந்து இன்று கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காங்கிரசார் தங்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இன்று மதியம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு நேரில் வந்து முதல்வர் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மாலை 7 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். நாளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
இதற்கிடையே 21 ம் தேதி தான் சந்த்திப்பேன் என்று உறுதியுடன் கூறி சென்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லியில் இருந்து இன்று வேறு வழியில்லாமல் புதுச்சேரி திரும்பினார்.
தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்த வருமாறும், முதலமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையின்போது ஆளுநர் ஆலோசகர் வரக்கூடாது,
கோப்புகள் தொடர்பாக துறை செயலாளர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நிபந்தனையுடன் முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.
மேலும் மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் சென்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உடனான 2 மணி நேர ஆலோசனைக்குப் பின் ஆளுநர் மாளிகையிலிருந்து தலைமை செயலர் அஸ்வினி குமார் புறப்பட்டார்.
இதனை தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு உகந்த நேரம், இடம், பங்கேற்கும் அதிகாரிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே புதுச்சேரியில் கவர்னரை கண்டித்து, ஆளுநர் மாளிகை வெயிலில் வெளியே முதல்வர் நாராயணசாமி இன்று 5-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகை வளாகத்தில் கிரண்பேடி ஜாலியாக உணவுகளை சாப்பிட்டும் அதை செரிக்க சைக்கிள் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.