அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பிற்கு உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி பல்கலைக்கழகங்கள் பாஸ்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கும் பல்கலைக் கழகங்களில் பயின்று வரும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து செய்யப்படுவதாக ஐ.சி.இ. எனப்படும் இம்மிகிரேஷன் கஸ்டம் என்போர்ஸ்மென்ட் ( Immigration and Customs Enforcement) அமைப்பு அறிவித்துள்ளது.
அறிவிப்பில், புலம்பெயர்ந்தோர் அல்லாத F-1 மற்றும் M-1 விசா வைத்துள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் தான் நடைபெறுகின்றன. எனவே ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியவேற வேண்டும்.
அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, சீனா, சவூதி அரேபியா, தென்கொரியா, கனடா நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவில் கல்வி பயின்று வருவதால், ஏராளமான மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் அறிவிப்பு பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி பல்கலைக்கழகங்கள் பாஸ்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
அதில், ஆன்லைன் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும். அது சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை எடுத்துள்ள முடிவில் மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. உரிய காலஅவகாசம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாசிக்க: தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை