யோகா தினம் ஒற்றுமைக்கான நாள். இது உலகளாவிய சகோதரத்துவத்தின் நாள். ‘வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா’ என்பதை நாம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிப்போம். என்று சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
உலகம் முழுவதும் இன்று 6வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசுகையில், “நமது குடும்பத்துடனான உறவை வலுப்படுத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள். யோகாவை நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்வோம்.
‘என் வாழ்க்கை-என் யோகா’ என்ற வீடியோ வலைப்பதிவிடல் போட்டியில் உலகெங்கிலும் உள்ள மக்களின் பெரும் பங்கேற்பு யோகா பிரபலமடைவதை பிரதிபலிக்கிறது என்பதை மோடி சுட்டிக்காட்டினார்.
மேலும் யோகா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பிராணயாமாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். கோவிட்-19 குறிப்பாக நமது சுவாச மண்டலத்தைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பல்வேறு வகையான பிராணயாமாவை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் வாசிக்க: சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம்- ராஜ்நாத் சிங்
இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து யோகா நிற்கிறது. இந்த உலகம் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு யோகா உதவுகிறது. யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். சிக்கலான சமயங்களை எதிர்கொள்ள தேவையான நம்பிக்கையை யோகா நமக்கு அளிக்கிறது. நாம் வாழும் பூமியை சுகாதாரமான இருப்பிடமாக வைத்திருக்க யோகா உதவுகிறது.
நம்முடைய ஆரோக்கியத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள முடிந்தால், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான மனிதகுலத்தை உருவாக்குவதில் உலகம் வெற்றி காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதைச் செய்ய யோகா நிச்சயமாக நமக்கு உதவும், என்று கூறினார்.
ஒரு நல்ல குடிமக்களாக, நாம் ஒரு குடும்பமாகவும் சமூகமாகவும் ஒற்றுமையாக முன்னேறுவோம். ‘வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா’ என்பதை நாம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிப்போம். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.