அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் என்று பலரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எம்.எஸ்.தோனி, சச்சின், மேரி கோம், மற்றும் பல சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியுள்ளது. அதே போன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தல படத்தின் வில்லன் நடிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மோடி தனது ஆரம்பத்தில் டீ விற்பது முதல் பிரதமரானது வரை வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தை மேரி கோம் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய் இயக்குனர் ஓமங் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு “பிஎம் நரேந்திர மோடி (PM Narendra Modi)” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில், நரேந்திர மோடியாக தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் வில்லனான நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. இதனை மகாராஷ்டிரா முதல்வரும், பாஜக உறுப்பினருமான தேவேந்திர பட்நாவிஸ் 23 மொழிகளில் வெளியிடுகிறார். இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்கிறார்.
மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அனுமதி கிடைத்ததாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளை குஜராத்தில் ஷூட் செய்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மோடியின் வாழ்க்கையும் படமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.