மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திரை உலகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் உட்பட லட்சக் கணக்கானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி வலப்புறம் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு மாநிலம் முழுவதும் 7 நாள் துக்கம் வரும் திங்கட்கிழமை வரை அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு தமிழ் திரை உலகம் சார்பில் வரும் திங்கட்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சஙகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்ஸி) ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.