மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக பூத் முகவர் கிரிராஜன் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று (19.2.2022) காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 வரை அமைதியான முறையில் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மீதம் உள்ள இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி, வெப்ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. தேர்தல் ஆணையம் கூறியிருந்தது போல பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்த நிலையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் மக்கள் ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார்.
அப்போது அங்கிருந்த பாஜக பூத் பிரமுகர் கிரிராஜன், அந்த பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிராஜன் கத்தியதால், வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. பாஜக பூத் பிரமுகர் கிரிராஜனை வெளியேற்றும்படி திமுக, அதிமுக பிரமுகர்கள் கூறினார்கள். இதனையடுத்து பாஜக பூத் பிரமுகர் கிரிராஜன் வெளியேற்றப்பட்டு, மற்றொருவர் முகவராக அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கனிமொழி, “மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பாஜக பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறுகையில், இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை உள்ளது. மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெறப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வரும் நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக பாஜக பூத் பிரமுகர் கிரிராஜன் மீது அங்கு தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும் படி பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாஜக பூத் பிரமுகர் கிரிராஜன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட கிரிராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.