பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசிடம் போனில் புகார் ெசான்ன பெண்கள் நேரில் வந்து புகார் தர தயங்குகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி நூற்றுக்கும் மேற்பட்டோரை பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த அச்சமுமின்றி புகார் தரலாம் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்தனர். இதற்காக செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 நாளில் ஏராளமான ெபண்கள் செல்போனுக்கு ெதாடர்பு ெகாண்டு திருநாவுக்கரசு கும்பலின் அட்டகாசத்தை பற்றி தெரிவித்தனர்.
ஆனால் அவர்களை கோவைக்கு நேரில் வந்து புகார் தெரிவியுங்கள் என்று சிபிசிஐடி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், நேற்றுவரை எந்த பெண்ணும் புகார் தர கோவைக்கு வரவில்லை.
ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் செய்த கல்லூரி மாணவியின் பெயர் மற்றும் எந்த கல்லூரியில் படிக்கிறார் என்ற விவரத்தை முதலில் போலீசாரும், பின்னர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையிலும் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
புகார் தந்தாலும் நம்முடைய அடையாளத்தையும் போலீசார் வெளியிட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசாரிடம் தைரியமாக புகார் அளிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது சிபிசிஐடி போலீசிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை பண்ணை வீட்டிற்கு அழைத்து வருவது எப்படி? அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் பாலியல் விவகாரங்களை அரங்கேற்றியது எப்படி? என்று சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளனர்.
இதன் தொடர்க்கியாக பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு கல்வி அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நேற்று வந்தது. அந்த காரிலிருந்து இறங்கிய சிபிசிஐடி போலீசார் இருவர், திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்குள் சென்று ஆய்வு நடத்தினர்.
மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வைத்து, சம்பவ இடத்தை ஒப்பிட்டு பார்த்தனர். பின், வரைப்படங்களையும் வரைந்து எடுத்து சென்றனர்.
இதன் மூலம், வீடியோவில் இருந்த வீடும், பாலியல் சம்பவம் நடந்த இடமும் ஒன்றுதான் என உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆய்வு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது. முன்னதாக அவர்கள் 2 பெட்ரூம், ஹால், சமையல் அறை, கழிவறை, வீட்டின் பின் பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூம் ஆகியவற்றை போட்டோ எடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.
பண்ணை வீட்டிற்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு பண்ணை வீட்டில், 3வது முறையாக சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.
இதன் இடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுகவின் தலைமையில் போரடிய நிலையில் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 34 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கடந்த வெள்ளிக்கிழமையன்று சிபிசிஐடி போலீசார் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 4 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்றிருந்த சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் நேற்று முன்தினம் கோவை வந்தார்.
அவர் தங்கியிருந்த அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசை அழைத்து வந்தனர். ஐஜி ஸ்ரீதர் 2 மணி நேரம் திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தினார். அப்போது இந்த கும்பலுடன் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் யார்? யார்?, போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பல முக்கிய புள்ளிகள் குறித்த தகவல்களை அவர் ஐஜி. ஸ்ரீதரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதனால், ஆளும் தரப்பில் முக்கிய புள்ளிகள் சிலர் தங்களுடைய பெயர் வெளிவந்து விடுமோ? என்ற அச்சத்திலும், பதற்றத்திலும் உள்ளனர். திருநாவுக்கரசின் போலீஸ் காவல் இன்று மாலையுடன் முடிவடைய இருப்பதால் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விசாரணை முடிந்து நீதிபதி முன்னிலையில் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.