கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அப்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் இல்லை. அவர் அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசுகிறார். அவர் அ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் மறைந்த தி.மு.க. தலைவரின் உடல், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒரு நாள் அரசு பொது விடுமுறை வழங்கி, ஒரு வாரம் அரசு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து, துக்கம் அனுசரித்து உள்ளது தமிழக அரசு.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வினர் நன்றி கூற வேண்டும். தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்திலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இருக்க வேண்டும்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 11 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்துள்ளனர்”, என்று பதிலளித்தார்.
இதற்கு முன்னதாகஅமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து, “நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறை அல்ல. பார்ட் டைம் அரசியல்வாதி ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் புரட்சிதலைவி அம்மா, எம்.ஜி.ஆர் ஆகியோர் இல்லாத காலத்தில் அவர்களை பற்றி பேசுகிறார். இது ரஜினியுடைய கோழை தனத்தைக் காட்டுகிறது என்றார். அம்மா, இருந்தபோது இப்படி பேசி இருந்தால் ரஜினி நடமாடி இருக்க முடியுமா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்”.
தொடர்பு செய்தி : கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி