தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை தமிழ்நாட்டில் தூத்துக்குடி நீதிமன்றத்தை அணுகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பிகாரை சேர்ந்த 12 தொழிலாளர்கள் இந்தி பேசியதால் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை பரப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பிய வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு ஓடுவதாக கிளப்பி விட்டனர்.
இது தமிழ்நாட்டில் பரபரப்பான சூழலுக்கு வித்திட்டது. இதற்கு பின்னால் அரசியல் ரீதியாக சில விஷயங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் பின்னணியில் வட மாநில பாஜக நிர்வாகிகளும், ஊடகங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். திமுக அரசிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 4 வழக்குகள் பாய்ந்தன.
இந்நிலையில் வதந்தி பரப்பிய உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதற்குள் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா தலைமறைவானதாக கூறப்பட்டது. இதற்கிடையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு பிரசாந்த் உம்ரா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் இளம் வழக்கறிஞராக இருப்பதால் தனது பணி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது.
இதன் மீது இன்று (7.03.2023) விசாரணை நடந்த நிலையில், வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை என டெல்லி நீதிமன்றத்தில் தமிழக அரசு சுட்டிக் காட்டியது. மேலும் பாஜக நிர்வாகியின் இந்த செயல் நாட்டையே பிளவுபடுத்தும் நடவடிக்கை மட்டுமின்றி, தேச துரோகமும் கூட எனக் கடும் குற்றம்சாட்டை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், முன் ஜாமீன் கேட்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடி நீதிமன்றத்தை நாட பிரசாந்த் உம்ராவிற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வதந்தி வழக்கில் முன் ஜாமீன் கோரிய வழக்கில் பிரசாந்த் உம்ராவின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா தள்ளப்பட்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்குள் தூத்துக்குடி நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார். இல்லையெனில் தமிழ்நாடு காவல்துறையின் கைது நடவடிக்கை பாயும் எனக் கூறப்படுகிறது.