பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “வடசென்னை” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில், வெற்றிமாறன், தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தனுஷ், “‘வடசென்னை’ படத்துக்கு தணிக்கை குழு ‘அ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். பார்வையாளர்கள் முன்னிலையில் வடசென்னை படத்தை நேர்மையாக படைக்க விரும்புகிறோம் என்று கூறினார்.
மேலும் பேசுகையில், “வடசென்னை” திரைப்படம் 2003, 2004ல் இருந்து உருவான கதை. பொல்லாதவன் படத்திற்குப் பிறகு வடசென்னை படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ஆடுகளம் திரைப்படத்தை எடுத்தோம். மீண்டும் நாங்கள் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம்.
சில நாட்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தை சிம்பு வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். சூப்பர் சார் என்று கூறினேன். பின்னர், மற்றொரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் அப்போது எனக்கு பெருந்தன்மை இருக்கிறது. ஆனால், அந்தளவிற்கு இல்லை என்று கூறி நடிக்க மாட்டேன் என்று கூறினேன். பின்னர் சில காரணங்களால், சிம்புவும் நடிக்க முடியாமல் போனது.
2003ல் ஆரம்பித்தது சுற்றி சுற்றி கடைசியாக என்னிடமே வந்து விட்டது. அதுபோல், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கும் முதலில் அவரைத்தான் தேர்வு செய்தோம். அப்புறம் சுற்றி சுற்றி கடைசியாக அவரையே நடிக்க வைத்தோம்.
தொடர்ந்து பேசிய தனுஷ், எனது திரை வாழ்க்கையில் ‘வடசென்னை’ மைல்கல் திரைப்படமாக இருக்கும். விரைவில் வடசென்னை 2ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தனுஷ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘வடசென்னை’ படத்தின் துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்துள்ளேன். இதுவரை தமிழ் சினிமாவில் எந்தவொரு கதாநாயகியும் நடித்திராத கதாபாத்திரம் இது என்று பேசினார்.
இயக்குநர் அமீர் பேசும் போது, “வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. ரவுடியாகவோ, வில்லனாகவோ நடிப்பதில் தப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் எந்த இயக்குநரை நம்பி போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது வெற்றிமாறன் தான். ஒரு நல்ல இயக்குநர், தேசிய விருது வாங்கியவர் படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருப்பது அரிதானது.
தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது” எனக் கூறினார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள ‘வடசென்னை’ அக்டோபர் 17ம் தேதி வெளிவருகிறது. வடசென்னை பகுதியை மையமாக வைத்து இதற்கான கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், வடசென்னை படம் தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்பு செய்திக்கு : வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வடசென்னை’