புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியது தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்கும் அரசாணையை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், ஆணையத்திடம் இருந்து ஆவணங்கள் அரசுக்கு எப்போது வந்தது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் கட்டிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அதிமுக அரசு கடந்த 2011ல் அமைத்தது. இதை விசாரணை ஆணையத்தை எதிர்த்து அப்போதைய தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, இந்த விசாரணை ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம்தான். இதனால் மக்கள் பணம்தான் வீணாகிறது என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, புதிய விசாரணை ஆணையம் அமைக்கப்படாது. ரகுபதி ஆணையத்திடம் உள்ள ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றார். இதையடுத்து, புதிய தலைமை செயலகம் கட்டிட கட்டிய விவகாரம் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான அரசாணையில், விசாரணை ஆணையம் தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும், போலீசாரிடம் 2 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்து. இந்த நிலையில் இந்த அரசாணை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் ஆவணங்களை பரிசீலித்திருக்க வேண்டும்.

ஆனால், எந்தஸ பரிசீலனையும் செய்யாமல் இயந்திரத்தனமாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்றார். அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், குற்றச்சாட்டு குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை. வெறும் விசாரணைதான் நடத்தப்படவுள்ளது என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன், ரகுபதி ஆணையத்திடம் உள்ள விசாரணை ஆவணங்கள் எல்லாவற்றையும் பெற்று, அவற்றை பரிசீலித்த பின்னரே, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், அந்த ஆவணங்களை அரசு எதுவும் செய்யாமல் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை 2 வாரத்திற்குள் நடந்துள்ளது. இது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவே, தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதேக்கேடேட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைப்பதாக கூறி , ரகுபதி ஆணையத்திடம் இருந்து ஆவணங்கள் தமிழக அரசுக்கு எப்போது வந்தது இந்த ஆவணங்கள் நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்து அட்வகேட் ஜெனரல் அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.