லட்சத்தீவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரஃபுல் கோடா படேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற 93 ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா படேல், கடந்த ஆண்டு ஒன்றிய பாஜக அரசால் லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பொதுவாக அரசு அதிகாரிகள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த பிரஃபுல் படேல் நியமிக்கப்பட்ட போதே சர்ச்சை தொடங்கியது.
தொடர்ந்து பிரஃபுல் கோடா படேல், அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் தவறான முடிவுகளை அமல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் லட்சத்தீவு அதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்தனர். ஒன்றிய பாஜக அரசு, லட்சத்தீவு அதிகாரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் படேல் எடுத்த பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு எதிராக ஓய்வு பெற்ற 93 உயர் அதிகாரிகள் (குடிமைப்பணிகள்) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அரசியலமைப்பு நடத்தை குழு என்ற பெயரில் 93 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், “தாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என்றும். நடுநிலைமை மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நம்புவதாகவும் கூறி உள்ளனர்.
வளர்ச்சி என்ற பெயரில் அழகான லட்சத்தீவில் நடைபெற்று வரும், அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆழ்ந்த கவலையை பதிவு செய்யவே கடிதத்தை எழுதியதாகவும் கூறி உள்ளனர்.
நிர்வாக அதிகாரியின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துள்ள அவர்கள், இந்த வரைவு விதிமுறைகள் ஒவ்வொன்றும் தீவுகள் மற்றும் தீவுவாசிகளின் நெறிமுறைகளுக்கும் நலன்களுக்கும் எதிரான பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது என கூறி உள்ளனர்.
மேலும், நிர்வாக அதிகாரியின் முடிவுகள் தீவுகளில் உள்ளவர்களின் நலன்களுக்கு எதிரான உள்ளது. அங்குள்ள சுற்றுச்சூழலையும் சமூகத்தையும் இது பாதிக்கிறது. இந்த முடிவுகளை அவர் லட்சத்தீவு மக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துள்ளார். அந்தத் தீவை ஒரு சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்பதற்காக லட்சத்தீவு சமூகம், பொருளாதாரம், மக்கள் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து, அவர்களின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தீவில் உள்ள 96.5% மக்கள் இஸ்லாமியர்கள். விலங்கு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இது லட்சத்தீவில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே, நிர்வாக அதிகாரியின் சர்ச்சைக்குரிய முடிவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் நிர்வாகியை லட்சத்தீவுக்கு நியமிக்க வேண்டும்” என்று கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
லட்சத்தீவில் பாஜக நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்