உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதற்கென செலவிடாமல் பல்வேறு வகைகளில் கையாடல் செய்த வழக்கில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முறைகேடு செய்ததற்கான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
 
புதிய பாடத்திட்டத்தின் கீழ் வல்லுநர் குழு அமைத்து பாடத்திட்டம் தயாரிப்பதற்கான கூட்டம் முறையாக நடத்தாமலேயே, நடத்தியதாக போலி கணக்குகள் காட்டி பல லட்சம் கையாடல் செய்ததாகவும், அதேபோல், பள்ளி மாணவர்களுக்கான “தேன் சிட்டு” என்ற சிறுவர் மாத இதழுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4 கோடி பணத்தை செலவழிப்பதில் முறைகேடு, 
 
மற்றும் “உலகமெல்லாம் தமிழ்” என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதற்கென செலவிடாமல் பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்தது,
 
மேலும் மலேசிய நாட்டு தமிழ் ஆசிரியர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து அங்கேயே பயிற்சி அளித்தது,
 
மற்றம் ‘எஜூசாட்’ ஒளிபரப்பு சாதனம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதில் கூடுதல் விலை கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
 
புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளி மற்றும் கல்வி துறை அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் 10 போலீசார் நேற்று காலை 7 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள இயக்குநர் அறிவொளி வீடு மற்றும் டிபிஐ வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
 
இரண்டு இடங்களிலும் 6 மணி நேரம் நடந்த சோதனையில், போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மோசடி செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் அதற்கான போலி பில்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.
 
இந்த சோதனையின்போதே இயக்குநர் அறிவொளியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
 
இதையடுத்து இயக்குநர் அறிவொளி மற்றும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதி அரசு அனுமதி அளித்துள்ளது.
 
மேலும் ராமேஸ்வர முருகன் என்பவர் அவர் பெற்ற லஞ்சப்பணத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருவது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
 
அந்த நகைக்கடையிலும் விரைவில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.