துணைக்கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், தனக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான போட்டியில் முன்னணி வீரர்களான ரோஹித், கோலி ஆகியோர் சொதப்பியது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இதற்கிடையில், விராட் கோலி – ரோஹித் சர்மா மோதல் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித் அன்ஃபாலோ செய்தது இதனை உறுதியாக்கியது. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், போலிகள் தோன்றினால் உண்மை மவுனமாகத்தான் இருக்கும் என்று ஸ்டேட்டஸ் பதிவிட்டது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. ஆனால் பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் அனுமதி இல்லாமல் ரோஹித் சர்மா தனது மனைவி மற்றும் மகளை தன்னுடனேயே 7 வார காலமும் தங்க வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து கோலி, ரோகித் இடம் விசாரிக்கவே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவருக்கும் இடையேயான பிரச்னை அணியின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால், பிசிசிஐயின் சி.இ.ஓ, சில நாட்களில் அமெரிக்கா சென்று இருவரையும் நேரில் சந்தித்து சமாதானப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விராட் கோலி, “டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் சிறப்பாக விளையாட வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. கண்டிப்பாக இது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் மிகச்சிறந்தவர்கள். ஐபிஎல், அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு கைகொடுக்கும். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கண்டிப்பாக கடந்து செல்ல வேண்டியது அவசியம். சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எனக்கு மிகப்பெரிய சவால் காத்துக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் சாதிப்பதே முதல் இலக்கு.
இந்திய அணிக்குள் எதாவது மோதல் இருந்தால் கண்டிப்பாக இப்படி சிறப்பாக செயல்பட முடியாது. ரோகித்துடன் எனக்கு எந்த மோதலும் இல்லை. இது போன்ற விஷயங்களை படிக்கும் போது எரிச்சலாக உள்ளது. இந்திய டிரெசிங் ரூம் குறித்த பொய்களை மக்கள் எப்படி நம்புகின்றனர் என தெரியவில்லை.
ரோகித்துக்கும் எனக்கும் பிரச்னை என்றால் அதை நேரடியாகவே என் முகத்தில் பார்க்க முடியும். நான் ரோகித்தை நேரடியாக பாராட்டியுள்ளேன். அவர் அதற்கு தகுதியானவர் தான். ஆனால் தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்” என்றார்.