காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பிலான நில மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட வருவாய் அலுவலர், 2 வட்டாட்சியர்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் மனை பிரிவுகளின் பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு, கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கி உள்ளார்.
ஆனால், அரசுக்கு வழங்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான 16.64 ஏக்கர் நிலத்தை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் என்பவர், அரசு அதிகாரிகள் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தினை ரத்து செய்து, அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலரான தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் ராஜேந்திரன்(54), காஞ்சிபுரத்தில் நில எடுப்பு வட்டாட்சியராக பணியாற்றி வரும் வட்டாட்சியர் எழில்வளவன்(50),
ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரான பி.பார்த்தசாரதி(33) காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக பணிபுரிந்து வரும் ராஜதுரை(41) மற்றும் உதவியாளரான பெனடின்(54) ஆகிய 5 பேர் மீதும் சிபிசிஐடி காவல் துறையினர் 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், 2 வட்டாட்சியர்கள் உள்பட 5 பேரை காவல் துறையினர் சிறையிலடைத்தனர். உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் இதுபோன்று நிலமோசடியில் ஈடுபட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.