எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் ேசர்க்கையில் பணியிலுள்ள ராணுவத்தினர் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு மறுக்கும் அரசாணையை உயர் நீதி மன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
 
மேலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே சேர்க்கை வழங்க வேண்டுமென கூறியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் ” பிளஸ் 2 முடித்துள்ளேன். எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை கடந்த 2018ல் எழுதினேன். தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தேன்.
 
எனது தந்தை இந்திய ராணுவத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதனால் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை வழங்குமாறு கூறியிருந்தேன்.
 
ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலர் கடந்த 1.6.2018ல் ெவளியிட்ட அரசாணைப்படி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கே எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்படும்.
 
பணியிலுள்ளவர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு கிடையாது எனக்கூறி, எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர். இதனால் என்னைப் ேபான்றோரின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பணியிலுள்ளவர்களின் வாரிசுகளுக்கும் எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழகத்தில் எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவம் மற்றும் படைப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு, முன்னுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவாக அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அதில், பணியிலுள்ளோரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை ஒதுக்கீடு தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி மனுதாரரும் முன்னுரிமை ஒதுக்கீடு பட்டியலின் கீழ் வருகிறார். எனவே, தமிழக அரசின் அரசாணை ஏற்புடையதல்ல. படைப்பிரிவுகளில் பணியிலுள்ளோரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை மறுக்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
 
நடப்பு கல்வி ஆண்டிலேயே எம்பிபிஎஸ் – பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவம் மற்றும் படைப்பிரிவினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
 
மேலும் தீர்ப்பின்போது, நீதிபதி ஒரு உதாரணத்தை குறிப்பிடுகையில், “தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுகிறார்.
 
ஒரு கற்பனையில் பார்க்கும்போது, இவரது வாரிசுதாரர் தற்போது முன்னுரிமை ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்பட்டிருப்பார்.
 
அதேநேரம் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து திரும்பியதும் தனது பதவியிலிருந்து விலகியிருந்தால் முன்னாள் ராணுவ வீரர் என்ற அடிப்படையில் அவரது வாரிசுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருக்கும். இந்த பாகுபாடு ஏற்புடையதல்ல’’ என்று சுட்டிக் காட்டினார்.