அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: பல இடங்களில் தேர்தல் குளறுபடிகளை அடுத்து வாக்கு எண்ணிக்கையை சரிவர நடத்த அறிவுறுத்தல்
சென்னை:
 
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு, இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தேர்தல் குளறுபடிகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
 
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம், டெல்லி, அரியானா உள்பட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
 
இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடக்கிறது.இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளதால், ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் அளவுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க அறிவுறுத்தியது. இந்த புதிய முறையை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்தல் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தெரிகிறது.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை 38 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
 
அன்றைய தினம் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேலும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது.
 
கடந்த 18ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், 45 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது.இதற்கிடையில் மதுரை வாக்குச்சாவடிகளுக்குள் தாசில்தார் சம்பூர்ணம் சென்று ஆவணங்களை நகல் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கலெக்டர் நடராஜன் மாற்றப்பட்டார்.
 
மேலும், தேனியில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
 
வாக்குப்பெட்டியை மாற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், தமிழகத்தில எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
 
அதேபோல, நாடுமுழுவதும் பிரதமர் மோடி மற்றும் பாஜ தலைவர்களின் தேர்தல் விதி மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டன.
 
இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அடுத்த 2 கட்ட தேர்தலை அமைதியாக நடத்துவது, வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆலோசனையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி, ராஜாராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்துரையாடினர்.
 
இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.
 
மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். இதில் எந்த 5 பெட்டிகளை எண்ண வேண்டும் என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் ஆலோசனையை ஏற்ப்பதாக தெரிவிக்கபட்டது
 
அடுத்து, தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறும் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் மறுவாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.
 
வாக்குப்பதிவு அன்று அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் ராணுவம் மற்றும் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 
அதேபோல, நாடு முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்துவது, விவிபேட் முறையில் வாக்கு எண்ணுவது குறித்தும் விரிவாக விவாதித்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
குலுக்கல் முறையில் 2% ஒப்புகை சீட்டு (VVPAT ) என்ணுவதால் ஆளும் கட்சிகள் கலக்கம் அடைந்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது