மயிலாடுதுறை அருகே பழைய பொருட்கள் வாங்கும் காயலான் கடையில், பண்டல் பண்டலாக தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் இதுவரை திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பல மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை முறையாக மாணவர்களுக்கு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஏராளமான பாடப்புத்தங்கள் தேங்கி உள்ளன.

இதுபோன்று மயிலாடுதுறையில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் ஏராளமான புத்தகங்கள் தேங்கி உள்ளன. இதை விற்று காசாக்க அங்கு பணி செய்து வந்த, கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் முடிவு செய்து, மயிலாடுதுறை, முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்குச் சொந்தமாக இரும்புக் கடையில் விற்பனை செய்துள்ளார்.

காயலான் கடையில் அரசின் புத்தகங்கள் புத்தம் புதியதாக குவிந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து கல்வி அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அங்கு கோட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.

அப்போது, விற்பனைக்கு போடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும், நடப்பு கல்வி ஆண்டிற்கான 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டல் பண்டலாக போடப்பட்ட புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து புத்தகங்களைப் பறிமுதல் செய்த கோட்டாட்சியர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள் சாமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாவட்டக் பள்ளிக்கல்வி ஊழியர் மேகநாதன் என்பவர் புத்தகங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரியே, பாடப்புத்தகங்களை விற்பனை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவர் சங்க நிர்வாகி அமுல் காஸ்ட்ரோ கூறுகையில், “கல்வித் துறையை சார்ந்தவர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகத்தை உரிய காலத்தில் வழங்காமல், காசுக்காக பழைய இரும்பு கடையில் போடப்பட்டுள்ளது பெரும் வேதனையை அளிக்கிறது.

பல மாணவர்களுக்கு இன்னும் முறையாக புத்தகம் சேரவில்லை. இந்த சூழலில் புத்தகங்களை பழைய இரும்புக் கடையில், விற்பனை செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். எனவே உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்; சர்ச்சையில் கல்வித்துறை