பிரிட்டானியா ரஸ்க்கில் இரும்பு போல்ட்.. விளக்கமளிக்காமல் விஷயத்தை மறைக்க பிரிட்டானியா நிறுவனம் கடும் முயற்சி.
கரூரைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கடந்த மாதம் தனது குழந்தைக்காக, பிரபல பிஸ்கெட் நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தின் தயாரிப்பான டோஸ்டீ ரஸ்க்கை வாங்கியுள்ளார். வீட்டுக்குச் சென்று குழந்தைக்கு சாப்பிடக் கொடுத்தபோது ஒரு ரஸ்க்கில் போல்ட் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் விவேகானந்தன்.
இதுகுறித்து பிரிட்டானியா நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விவேகானந்தனிடமிருந்து இரும்பு போல்ட்டிருந்த ரஸ்க் தொடர்பான தகவல்களை மட்டும் பெற்றுக் கொண்டு, இதை பெரிதாக பிரிட்டானியா நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. .
எனினும், இந்த விவகாரத்தின் ஆபத்தை உணர்ந்த விவேகானந்தன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப் போவதாக பிரிட்டானியா நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். விவேகானந்தனின் முடிவைக் கேட்டு அதிர்ந்துபோன பிரிட்டானியா நிர்வாகம் மதுரையிலிருந்து தங்கள் நிறுவனத்தின் 2 ஊழியர்களை அனுப்பி, விவேகானந்திடம் போல்ட்டுடன் கூடிய ரஸ்க்கை பெற முயன்றுள்ளனர்.
எனினும் விவேகானந்தன் அந்த போல்ட் ரஸ்க்கை பிரிட்டானியா ஊழியர்களிடம் ஒப்படைக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் கிப்ட் பாக்ஸ் ஒன்றை விவேகானந்தனிடம் கொடுத்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, போல்ட் ரஸ்க் குறித்து விவேகானந்தன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற ஆட்சியர் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, ரஸ்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
விவேகானந்தனிடமிருந்து ரஸ்க் பாக்கெட்டை பெற்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த பாக்கெட்டை ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டால் பிரிட்டானியா நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பிரிட்டானியா நிறுவனம் இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் சாப்பிடும் இந்த ரஸ்க் சுகாதாரமின்றி தயாரிக்கப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் இந்த விவகாரத்தை மறைக்க பிரிட்டானியா நிறுவனம் முயன்றுள்ளது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.