கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பக்கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தபடும் என்ற புதிய அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் அரசின் முயற்சியில் தனது பங்காக ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றி வரும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது இந்திய ரயில்வே துறை.
முதற்கட்டமாக இந்திய ரயில்வே துறை கட்டுப்பாட்டிலிருக்கும் 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் எட்டு படுக்கைகளுடன் கூடிய 8 தனிமைப்படுத்தும் வார்டுகள், 3 கழிவறைகள், ஒரு குளியலறை அமைக்கப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒரு மருத்துவர், மருத்துவ உதவியாளர்கள் இருக்கும் வகையில் ரயில் பெட்டிகளை மாற்றி அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வீடியோ கான்பரன்ஸ் மூலம், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், அவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
கொரோனா வைரஸால் சமூகத் தொற்று ஏற்படும் நிலையில், இதுபோன்று ரயில் பெட்டிகளை வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் வார்டுகளாக பயன்படுத்திய பின்னர், அந்த ரயில்களை எவ்வாறு ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவருவார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.