நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் “இன எழுச்சி முழக்கம்” பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சீமான், “தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன் தான். அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். எல்லோர்கிட்டயும் கதை கூறினேன். ஆனால் மற்றவர்கள் பயந்தார்கள். நான் நடிக்கிறேன் அண்ணா என்று சிம்பு துணிச்சலாக சொன்னார். சிம்பு நேர்மையானவர், துணிவானவர் என்று பாராட்டினார்.

மேலும் கருணாநிதி, ஜெயலலிதா, போன்றோர் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். அவர் தான் உண்மையான ஆண்மகன். ரஜினி, கமல் போன்றோர் ஹீரோக்கள் அல்ல. ஜீரோக்கள். உங்கள் திரை ஆளுமையை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக்கூடாது என்று விமர்சித்த சீமான், நடிகர் விஜய் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

சர்கார் படத்துக்கு அரசு தரப்பில் பிரச்சினை கொடுத்தபோது பணிந்து போகாமல் விஜய் உறுதியாக நின்று இருக்கலாம். என் படத்தில் அவர் நடிக்க மாட்டார். ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார் என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு ‘மோடி அடிமை'” என்று சாடினார்.

விஜய் பற்றி சீமான் கூறிய கருத்துக்களால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஷ்டேக் ஒன்றில் தொடர்ந்து பதிவிட்டு அந்த ஹாஸ்டேக் தேசிய அளவில் டிரெண்டானது. இந்த ஹாஸ்டேக்கை பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் 50,000 டுவிட்டுகளுக்கு மேல் பதிவிட்டுள்ளனர். தவிர, 24 மணி நேரத்துக்கும் மேலாகவும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. விஜய்யை விமர்சித்த, சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விஜய்யின் ரசிகை ஒருவர் தன் ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.