ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைக்கிறார் என்று முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் அண்மையில் பேட்டியளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில், ஏ.கே. அந்தோணி அளவுக்கு அதிகமாக தலையிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஏ.கே. அந்தோணி செவ்வாய்க்கிழமை பதிலளித்தார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரம் ” நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு, முழுவதும் பொய் ஆகும். ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை அவர் மறைக்கிறார். காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் தொடர்பான பேச்சு முடிந்து, மத்திய நிதியமைச்சகத்துக்கு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட புதிய திட்டத்துக்கு நிதியமைச்சகம் ஆதரவு அளிக்கவில்லை. பாஜக எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசிடம் ஆட்சேபனைகளை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையை மீண்டும் தொடரும்படி நான் உத்தரவிட்டேன். பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் நற்பெயருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் களங்கத்தை ஏற்படுத்த நிர்மலா சீதாராமன் முயற்சித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இறுதி செய்யப்பட்ட விலையைக் காட்டிலும், 9 சதவீதம் குறைவான விலையில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவிக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ, 20 சதவீதம் விலை குறைவு என்கிறார்.
விமானப்படை அதிகாரியோ 40 சதவீதம் விலை குறைவு என்கிறார். அப்படியிருக்கையில், முன்பே திட்டமிட்டபடி 126 போர் விமானங்களை வாங்காதது ஏன்?
காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலகும் தருவாயில், ரஃபேல் போர் விமானம் தொடர்பான பேச்சுவார்த்தை ஏறத்தாழ முடிந்து விட்டது. ஆனால், பாஜக கூட்டணி அரசு பதவியேற்றபிறகு, பிரதமர் நரேந்திர மோடி தன்னிச்சையாக 36 விமானங்கள் வாங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவுக்கு வாங்கப்படும் ஆயுதங்கள், போர் விமானங்கள் எண்ணிக்கை குறித்த முடிவை, பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் முப்படை தலைமை தளபதிகளை கொண்ட பாதுகாப்பு தளவாட கவுன்சில்தான் எடுக்கும். இதை வெளிப்படையாக மீறும் வகையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் முடிவு உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசால் 126 விமானங்களை வாங்குவது தொடர்பாக எவ்வளவு மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது? 36 போர் விமானங்களை மட்டும் வாங்க எவ்வளவு மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும்போது, யார் தெரிவிப்பது உண்மை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுவது தொடர்பாக மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில், ஏராளமான ரகசியங்கள் இருக்கலாம் என்ற கருத்து வலுத்து வருகிறது. இதனாலேயே, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு, அதுகுறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
ஆனால் மத்திய அரசோ, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பதில் இருந்து விலகிச் செல்கிறது? இது ஏன்?
ரஃபேல் போர் விமான விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, மத்திய அரசு 36000 கோடிகளுக்கு மேல புரிந்துள்ளது என்றார் ஏ.கே. அந்தோணி.