மோடியின் பாஜக அரசு வந்தால் பெட்ரோல் விலை 40ரூ குறையும் .,டாலரின் மதிப்பு 40க்கு சரியும் என்றேல்லாம் போலி உறுதி அளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு சமூக வளைதளத்திலே எழுந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயில் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. யுனெஸ்கோவினால், பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் 25 ஏக்கர் அளவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கோயிலை ஒட்டி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது போன்ற படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, கோயிலை கண்காணித்து வரும் தொல்லியல் துறை அதிகாரி கூறுகையில், “டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தற்காலிகமாக பந்தல் போடப்பட்டுள்ளது.
சென்னை அலுவலகத்தில் இருந்து அவர்கள் அனைத்து அனுமதியையும் பெற்றுள்ளார்கள். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சாவூர்காரர்தான். அதனால், இங்கே நிகழ்ச்சி நடத்த விரும்பியுள்ளார். ஒருவேளை பந்தலின் எந்தப் பகுதியாவது கோயிலுடன் இணைந்திருந்தால் அதனை நீக்கிவிடுவோம். கோயிலில் பந்தல் அமைப்பது முதன்முறை அல்ல. ஆனால், ஏன் இப்போது சர்ச்சை எழுகிறது என்று தெரியவில்லை” என்றார்.
ஆனால், கோயிலில் உள்ள ஒரு அர்ச்சகர் பேசுகையில், “இதற்கு முன்பும் நிகழ்ச்சிகளுக்காக பந்தல்கள் போடப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு பெரியதாக இதற்கு முன்பு அமைத்ததில்லை. பக்தர்கள் செல்லும் பாதைக்கு இடையூறாக அமைந்ததில்லை. இதற்கு முன்பாக நிகழ்ச்சிகள் கோயிலுடன் தொடர்புடையவை. தனியார் நிகழ்ச்சிகளுக்காக கோயில் நிலத்தில் அனுமதி அளிப்பதை என்னுடைய 20 ஆண்டுகள் பணியில் பார்த்ததில்லை. இது மிகவும் தவறானது. அவர்கள் எப்படி அனுமதி வாங்கினார்கள் என்பதே தெரியவில்லை.
ராஜராஜ சோழன் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சிறியதாக பந்தல் அமைப்போம். ஆனால், தற்போது ஒரு பக்க வழியையே மறைத்துவிட்டார்கள்” என்று கூறினார்.
அனைத்துவிதமான அனுமதியையும் பெற்றுள்ளதாக வாழுமை கலை அமைப்பின் தமிழக ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜி சுவாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிகழ்ச்சி நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே நாங்கள் அனுமதி பெற்றுவிட்டோம்.
இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது, நிரந்தரமான எந்தப் பந்தலும் போடக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளை மட்டும் சொன்னார்கள். இது தியானம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இதில் கூச்சல் ஏற்பட வாய்ப்பே இல்லை. இசை நிகழ்ச்சியும் கிடையாது. கடந்த காலங்களிலும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தஞ்சை பெரிய கோயிலில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும். வணிக நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நடத்த கோயிலின் உள்ளே அரங்கம் உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரம்பரியம் மிக்க சின்னமாக உள்ள இதுபோன்ற கோயில்களில் எப்படி அனுமதி அளிக்கப்படுகிறது என்று வரலாற்று ஆசிரியர் ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது வழிபாடு நடத்தும் இடம். இங்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது.
ஒருமுறை 40 பேர் ஹம்பிக்கு குழுவாக சென்றிருந்தார்கள். அவர்கள் ஒன்றாக கிளாசிகல் பாடலை பாடத் தொடங்கினர். அப்பொழுது தொல்லியல் துறை அதிகாரி அவர்களை பாடக் கூடாது என்று சொன்னார். பாடுவது கூட பாதிப்பை உருவாக்கும் என அவர்கள் நினைத்தார்கள்” என்றார்.
‘வாழும் கலை’அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சிக்கல் வரும் இது முதன்முறை அல்ல. யமுனை ஆற்றங்கரையில் மாபெரும் உலகக் கலாச்சார விழா என்ற நிகழ்ச்சியை நடத்தியதற்காக அவருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ5 கோடி அபராதம் விதித்தது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.