அயோத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற ராம்மந்திர் அறக்கட்டளை தலைமை நிர்வாகி நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்கான அமைக்கப்பட்டுள்ள டிரஸ்ட் அதற்காண பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்குள் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட நாடு முழுவதும் இருந்து சுமார் 175 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு, முன்கூட்டியே கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, சில நிர்வாகிகளுக்கு, கொரானா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்களுக்கு விழாவில் பங்கேற்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில், தற்போது ராம்மந்திர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமர்கோவில் பூமிபூஜை நிகழ்ச்சியின்போது, பிரதமர் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்த நிலையில், நிருத்யகோபால்தாஸ் மட்டும் முகமூடி அணியாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும்நிலையில், இந்த பூமி பூஜை விழா நடைபெற்றது பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: பிஎஸ்என்எல் ஊழியர்கள் தேசத்துரோகிகள்; அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம்- பாஜக அமைச்சர்