பிஎஸ்என்எல் ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்று பாஜக அமைச்சர் கூறியிருப்பது, தங்களை அவமதிக்கும் செயல் என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசால் தீர்க்க முடியாத அளவுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் களங்கம் இருப்பதாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்றும் பாஜக அனந்தகுமார் ஹெக்டே விமர்சித்துள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரதமர் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். ஆனாலும் அவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தேவையான கட்டமைப்புகள் உள்ளது. ஆனால் அங்குள்ளவர்கள் பணி செய்வதில்லை. எந்த ஊரிலும் பிஎஸ்என்எல் நெட்ஒர்க் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க: உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

இதனை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 85 ஆயிரம் ஊழியர்களை மத்திய அரசு பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மையமாக்குவதே ஒரே தீர்வு என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சர் அனந்த குமாரின் பேச்சுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறுகையில், முறையாக இயங்கிக் கொண்டிருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நோக்கில், அதன் ஊழியர்களை கட்டாய விருப்ப ஓய்வு பெற வற்புறுத்தி அதன் செயல்பாடுகளை முடக்கியது பாஜக மோடி அரசு என பிஎஸ்என்எல் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.