மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிய பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. மக்களவை தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை புரிய வேண்டும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் மகாதேவன், பி.வி. சிந்து, சாய்னா நேவல், கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மா, திரையுலக நட்சத்திரங்கள் மோகன்லால், நாகர்ஜூனா, சல்மான் கான், அமீர் கான் என பல்வேறு பிரபலங்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

மோடியின் டுவிட்டை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் குஷியாகி பதிலுக்கு அவரை மென்ஷன் செய்து மக்களே நம் ஜனநாயக கடமையை செய்ய மறக்கக் கூடாது, அப்படி இப்படி என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆனால், ஏதாவது பெரிதாக சொல்வார்கள், அதை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்து மோடி டுவிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மானோ கண்டிப்பாக, நன்றி என்று எளிமையாக பதில் அளித்துவிட்டார். ஏற்கனவே, தமிழகத்தில் பாஜகவை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் உள்ள நிலையில், ரகுமானின் இந்த பதிலும் அதை குறிப்பிட்டு பேசுவது போல் உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பதிலை பார்த்து சமூக வலைதளங்களில், யாரை மென்ஷன் செய்தாலும் தமிழகத்தில் தாமரையை மலரவிட மாட்டோம் என்று பதில் அளித்துவருகின்றனர்.