மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்காள அரசாங்கத்தை கொத்தடிமைகளை போல ஆளுநர் நடத்துகிறார் என குற்றம்சாட்டி, ஆளுநர் ஜெகதீப் தங்கரை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் அரசை ஆளுநர் ஜெகதீப் தங்கர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தனது ஒப்புதலின்றி மேற்கு வங்காள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் குற்றம் சாட்டி வருகிறார்.
இதனால் மேற்கு வங்காளத்தில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கும், ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போது பேசிய ஆளுநர் ஜெகதீப் தங்கர், “ஜனநாயகத்தின் காஸ் சேம்பர் ஆக மேற்கு வங்கம் மாறி வருகிறது. மனித உரிமைகள் நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எத்தகைய அவமானங்களும் எனது கடமையை செய்வதிலிருந்து என்னை தடுக்காது” என்று மம்தா பானர்ஜியை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ஆளுநரின் செயல்பாடுகளால் கோபமடைந்த மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க அரசுக்கு எதிரான ஆளுநர் ஜெகதீப் தங்கரின் ட்விட்டர் பதிவுகளால் மனதளவில் பாதிக்கப்படுகிறேன். எனவே எனது ட்விட்டர் கணக்கில் ஆளுநர் தங்கரை பிளாக் செய்துள்ளேன்.
மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் இயக்குநரை ஆளுநர் தங்கர் மிரட்டுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பல முறை கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
இது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாநில விவகாரங்களில் ஆளுநர் தலையீட்டை நாடாளுமன்றத்தில் எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.சுதிப் பந்தோபாத்யாய தெரிவித்துள்ளார்.