மேகாலயா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக கான்ரட் கொங்கல் சங்மா செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உள்பட மொத்தம் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
மேகாலயா மாநில காங்கிரஸ் தலைவராக வின்சென்ட் எச்.பலா கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். இதனால் மேகாலயா முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான முகுல் சங்மா காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
அவரை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் தொடர்ந்து முகுல் சங்மா அதிருப்தியிலேயே இருந்து வந்தார்.
இதனையடுத்து முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் 12 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று (24.11.2021) நள்ளிரவே 17 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில், முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இது மேகாலயா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஒரு கட்சியின் மொத்த எம்எல்ஏ.க்களில் மூன்றில் 2 பங்கு பேர் வேறு கட்சியில் இணைவதை கட்சித் தாவல் தடை சட்டம் அனுமதிக்கிறது. எனவே திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 12 எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்காளத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரசின் அரசியல் வட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் அந்த மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு செல்ல வேட்பாளராகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார்.
இதேபோல், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.