நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் பல்வெறு மாவட்டங்களில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடிக்கான உழவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டங்களில் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரப்பப் படாமலும், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் போர்வெல் பாசனத்தின் மூலம் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் கக்கரை, கூவத்தூர், திருமங்கல கோட்டை, திருநல்லூர், தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி விட்டு விட்டு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் வாடிய நிலையில் காணப்படுகிறது.
தண்ணீர் இல்லாமல் தவித்த விவசாயிகள் இப்போது மின்சாரத்துக்கும் ஏங்கும் நிலை உள்ளது.தஞ்சை நகர் பகுதிகளில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.
அதேநரத்தில் கிராமப்புறங்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த முறை சுதந்திர தின உரையில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கி விட்டதாக அதிமுக அரசின் முதல்அமைச்சர் எடப்பாடி கூரியதாக பிரபல பத்திரிகை தினதந்தியும் கூறியது குறிப்பிடதக்கது
ஆனாலும் இரவு நேரங்களிலும் திடீர் திடீரென மின்வெட்டு இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்த 4 நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர்.இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேரளம், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய கிராமங்களில் தினமும் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் பகல் நேரத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தக சங்கத்தினர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபுவை நேரில் சந்தித்து ‘ தடையின்றி மின்சாரம் வழங்க கோரி’ மனு கொடுத்தனர்.
நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், பொறையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் அதிகபட்சமாக தினமும் 6 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாமல், கடைமடை விவசாயிகளும் விழிபிதுங்கி தவித்து வருகிறார்க்ள்
பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக நிலக்கரி இறக்குமதி செய்தாலும் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று வல்லூநர்கள் கூறியுள்ளனர். காற்றாலை மின்சாரம் கைகொடுக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.
நீர் மின்சாரம் மற்றும் கூடங்குளத்தில் இருந்து பெறப்படும் அனு மின்சாரத்தை கொண்டு சமாளித்தாலும் மின்சார பற்றாக்குறையை சமாளிப்பது கடினம் என்று அதன் வல்லூநர்கள் தெரிவித்துள்ளனர்.
அனல் மின்சாரத்திற்கு தேவையான நிலக்கரி 21 நாட்களுக்கு இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது மின்வெட்டு அபாயத்தை அதிகரித்துள்ளது.இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.