திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் ‘மூக்குப்பொடி’ சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர்.
 
இவர் ‘மூக்குப்பொடி’யை விரும்பிப் பயன்படுத்துவதால் ‘மூக்குப்பொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
 
தனது மனைவியின் மரணத்திற்கு பிறகு ஆன்மிகத்தை தேடிச் சென்ற இவர் வீரபத்திரசாமியை வழிபட்டு வந்தார். திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்தார்.
 
‘மூக்குப்பொடி’ சித்தரின் அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது.
 
மூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால், யாரெல்லாம் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறார்களோ, அவர்களெல்லாம், மூக்குப் பொடி வாங்கிச் செல்வர். உள்ளூர் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களும், இவரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்வர்.
 
ஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவும் மாட்டார். ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் பக்தர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடிப்பார். அடி வாங்கினார், பாவங்கள் தொலைந்து கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
 
அவரை அழைத்து செல்வதற்கு என்றும் தனியாக டிரைவர் நியமித்து, அவர் இருக்கும் இடம் அருகில் கார் ஒன்றையும் நிறுத்தி வைத்துள்ளனர் தொழிலதிபர்கள். ஆனால், அந்த காரை பயன்படுத்தாமல், ஆட்டோவில் ஏறி கிரிவலம் செல்வார்
 
உள்ளூரில் பிரபலமான தொழிலதிபர் நடத்தும் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்து கல்லா பெட்டியை திறந்து கைக்கு வந்த பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு செல்வார். மேலும், அந்தப் பணத்தை கோயிலுக்கு தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க வரும் பக்தர்களுக்கோ அல்லது கிரிவலம் வருவதற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கோ கொடுப்பார்.