பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மத்திய அரசு ஓபிசி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103-ஆவது திருத்தமாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும். இந்த சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், சாதி ரீதியாகப் பின்தங்கிய மக்களை சமநிலைக்குக் கொண்டு வரவே இடஒதுக்கீடு வழங்க வேண்டுமே தவிர பொருளாதார ரீதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது.
ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் என்ற நிலையற்ற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பிரிக்க முடியாது. எனவே, 10 சதவீத இடஒதுக்கீடு எப்படி சாத்தியமாகும் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், சாதி ரீதியாக மட்டுமே வழங்க முடியுமே தவிர பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு வழங்க வேண்டும் எனக் கூறப்படுவில்லை என்று வாதிட்டார்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர், எம்.பி. என்ற முறையில் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்தார்.
நாடாளுமன்றத்தில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவிதமான பொதுநலனும் இல்லை. தான் சார்ந்துள்ள கட்சியின் அரசியல் ரீதியிலான கொள்கையின் அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் மத்திய அரசு சட்டப்பூர்வமாக வாதிட வேண்டும், அரசியல் ரீதியாகப் பார்க்கக்கூடாது என்றார்.
அப்போது நீதிபதிகள் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கு என கேள்வி எழுப்பினர்.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இதுவரை இடஒதுக்கீடு கிடைக்காத பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குத் தான் இந்த இடஒதுக்கீடு என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தானே பிறகு எதற்காக பொதுப்பிரிவினர் என குறிப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக மத்திய அரசு விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.