எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் வாக்கு வாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈடுப்பட்ட ருசிகர  சம்பவம் நடந்து உள்ளது
 
மாநிலங்களவையில் வைகோ இன்று எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி எடுத்து பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோ துணைக்கேள்வி கேட்டார்.
 
அப்போது பேசிய வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சபையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்றார். அப்போது அவையில் இருந்த பிரதமர் மோடி மேஜையை தட்டி வரவேற்றார்.
 
தொடர்ந்து பேசிய வைகோ, ”பருத்தி விலை, பஞ்சு விலை திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி சூழ்நிலை ஏற்படுகிறது.
 
மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச் சூழல் விதிகளை முறையாக பின்பற்றுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி கேட்டார்.
 
வைகோ கேட்ட அந்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் கூற மறுத்துவிட்டார். முதலில் வைகோ பேச்சை ரசித்த பிரதமர் மோடி தனது அமைச்சர் பதில் சொல்ல இயலாத நிலை கண்டு மவுனத்துடன் முகம் இறுகி இருந்தார்
 
ஆனாலும் விடாத வைகோ ” ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்துக்கு அனுப்புகின்றனர். பிறகு வங்கதேசத்தினர், வங்கதேச நாட்டு முத்திரை பதித்து இந்தியாவுக்குள் கொண்டு வந்து குவிக்கின்றனர். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?” என கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார். உடனடியாக வைகோ, உங்கள் பதிலில் திருப்தி இல்லை என கூறினார்.
 
முன்னதாக வைகோ, வில்சன், சந்திரசேகர் உள்ளிட்ட 5 தமிழக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
 
தமிழகத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, மக்களவைக்கு தேர்வானதால் அந்த இடம் காலியானது.
 
இதனை ஒட்டி, 6 எம்.பி.க்கள் புதிதாக போட்டியின்றி தேர்வாகினர். திமுகவில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இருந்து வில்சன், சண்முகம், அதிமுகவில் இருந்து முகம்மது ஜான், சந்திரசேகர், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இன்று வைகோ, வில்சன், சண்முகம், சந்திரசேகர், முகம்மது ஜான் ஆகிய 5 பேரும் மாநிலங்களவையில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டனர்.
 
அன்புமணி இன்று பதவியேற்றுக்கொள்ளவில்லை. பாமக தலைவர் ராமதாஸ்-ன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதால், அவர் குடும்பத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
 
5 பேரும் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டனர். ”இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்” எனக்கூறி 5 பேரும் உறுதிமொழி எடுத்தனர்.