தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில், 4 மாத குழந்தை அழுதது இடையூறாக இருப்பதாகக் கூறி, தாயும், குழந்தையும் இறங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று (ஜனவரி 18) மதியம் 12 மணிக்கு டெல்லி செல்லும் விஸ்டாரா விமானத்தில் தமிழக முதல்வர் பயணித்தார். 94 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்தில்,
டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண், தனது கணவர் ராகுல் மற்றும் 4 மாத பெண் குழந்தையுடன் டெல்லி செல்ல விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அப்போது லட்சுமிதேவியின் 4 மாத குழந்தை திடீரென இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி அவரிடம் விமான பணிப்பெண்கள் கூறினர். லட்சுமிதேவி எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு, முதல்வர் பழனிசாமி உள்பட விஐபி பயணிகள் இருப்பதைக் காரணம் காட்டி, அவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி விமானத்தில் இருந்து இறங்குமாறு விமான பணிப்பெண்கள் லட்சுமிதேவியைக் கேட்டுக் கொண்டனர்.
ஆரம்பத்தில் தயங்கிய லட்சுமிதேவி, பின்னர் விமான பணிப்பெண்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தனது 4 மாத கைக்குழந்தையுடன் விமானத்திலிருந்து இறங்கி விட்டார். அதன் பின்னர், மதியம் 12.15 மணிக்கு முதல்வர் பழனிசாமி உட்பட 93 பயணிகளுடன் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அந்த பெண், கைக்குழந்தையுடன் விமான நிலையத்தின் உள்பகுதியில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் கைக்குழந்தையுடன் அந்த பெண் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டார் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
4 மாத கைக்குழந்தையுடன் தாயை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏர்லைன்ஸின் இந்த நிலைப்பாடு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து விமர்சித்து உள்ளனர்.
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள்.. கலக்கத்தில் பாஜக