ஒவ்வாமை, காய்ச்சல், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் தீவிர மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த இரண்டு தடுப்பு மருந்துகளில் எது வேண்டும் என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வாமை, காய்ச்சல், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் தீவிர மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள், தங்களின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவாக்சின் தடுப்பு மருந்து சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்த குறைந்தபட்ச வாய்ப்பிருப்பதாகவும், அதேபோல், தீவிர ஒவ்வாமை, இதயத்துடிப்பு அதிகரிப்பு, முகம் மற்றும் தொண்டை வீங்குதல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்த குறைந்தபட்ச வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவாக்சின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களிடம் மட்டும், மருத்துவ பரிசோதனை செய்யும் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மருத்துவ சோதனையின் அடிப்படையில், இந்த மருந்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று, அந்தப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு, மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவடையும் முன்னரே, அவசர அனுமதி வழங்கப்பட்டதற்கு, மருத்துவ வல்லுநர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் இதுவரை தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை