மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு 15 நாட்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இதுபோல இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொருளாதார ரீதியாகவும், இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கத்தக்கதல்ல என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரினார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டதாகவும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டு, அந்த இடங்களில் 20 இடங்கள் 7.5 % இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு, அவற்றுக்கான கலந்தாய்வு நடந்து வருவதாகவும், இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடந்து வரும் நிலையில், பொது நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
மேலும் இந்த வழக்குகளில் தமிழக அரசு 15 நாட்களில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
அரசு பள்ளி மாணவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டாம்- உயர்நீதிமன்றம்