மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதாக, கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திருச்சி மாவட்டத்தினர் 39 பேர், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தினர் தலா ஒருவர் என மொத்தம் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களுடன் தொடர்புடைய 165 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 103 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. இன்னும் 59 நபர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவரின் தாயாருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் சிகிச்சை அளிக்க வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 மருத்துவர்களிடம் முகக் கவசங்களை வீசி, எச்சில் துப்பியுள்ளனர். இதனால் தங்களுக்கு தொற்று ஏற்படும் வகையிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக மருத்துவர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை என 3 பிரிவுகளில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் 7 பேர் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஈரோட்டு வாலிபர் சிகிச்சை முடிந்து முழு நலமுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவகுழுவினர் கைதட்டி, பூச்செண்டு கொடுத்து வழியனுப்பினர். ஆனால், இப்படி சிலர் முரணாக, முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
முன்னதாக அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியால் வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர், முடிவுகள் வெளியாகாத நிலையில், தான் அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபோன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளையும் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.