தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தாயை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை நகரில் மையப்பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. இப்பிரிவில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, கழிவறையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மருத்துவமனையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்று அரைமணி நேரம் கழித்து வெளியே வரும் காட்சிப் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து அந்தப் பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் அன்றைய தினம் வருகை பதிவேட்டில் 250 பேர் வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 20 பேர் யாரிடமும் கூறாமல் திரும்பி சென்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணையில் சிசிடிவி காட்சியில் காணப்பட்ட அப்பெண், தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பிரியதர்ஷினி (வயது 23) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்ற சில மணி நேரத்திலேயே யாருக்கும் தெரியாமல் குழந்தையைக் கழிவறைக்குத் தூக்கிச் சென்று கழிவறை ஃபிளஷ் டேங்க்கில் போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் காவல்துறையினர் பிரியதர்ஷினியை கைது செய்து, எதற்காகக் குழந்தையைக் கொலை செய்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
காவல்துறையிடம் பிரியதர்ஷினி கூறியதாவது, “எனக்கு திருமணமாகவில்லை. நான் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். அப்போது உடன் வேலை பார்க்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் நான் கர்ப்பம் அடைந்தேன்.
பலமுறை அவர் கர்ப்பத்தை கலைக்க சொல்லி என்னை வற்புறுத்தினார். இதனால் என்னை அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விடுவாரோ என்று பயந்தேன். மாதங்கள் அதிகரிக்க எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. எல்லோருக்கும் தெரிந்தால் அவமானம் ஆகி விடுமே என்று அச்சமடைந்தேன்.
இதனால் நான் தஞ்சைக்கு திரும்பி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆம் தேதி வேறு நோய் உள்ளதாக கூறி உள்நோயாளியாக சேர்ந்தேன். எனக்கு பிரசவ வலி அதிகமானதால் 4 ஆம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்றேன். வலி அதிகமாகவே சுயமாக பிரசவம் பார்த்தேன்.
அதில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை வீட்டுக்கு தூக்கி சென்றால் அவமானம் ஏற்படும் என்பதால் மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை நவீன கழிவறையில் ஃபிளஷ் டேங்க்கில் உயிருடன் போட்டு விட்டு வெளியே வந்து விட்டேன்.
இதில் சிறிது நேரத்தில் மூச்சு திணறி குழந்தை இறந்தது. பின்னர் எதுவும் தெரியாதது போல் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறாமல் வீட்டுக்கு சென்றேன். ஆனால் காவல்துறையில் மாட்டிக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.