பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கெதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில், அந்த பதிவை படிக்காமல் பகிர்ந்து (Forward) விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? அவ்வாறு forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ சர்ச்சை; அண்ணாமலை பேரம் பேசியதாக மதன் வெளியிட்ட ஆதாரம்!