கர்நாடக மாநில பாஜக தலைவர், தேசியச்செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அனந்தகுமார், 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார்(59) சிகிச்சை பலனின்றி காலமானார்.
அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக காலை 8 மணி வரை லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: “எனது முக்கிய சகாவும், நண்பருமான அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரமடைந்துள்ளேன். இளம் வயதில் பொது வாழ்க்கைக்கும், அரசியலுக்குள் நுழைந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றிய மிகச்சிறந்த தலைவர் அவார். அவரது நல்ல செயல்களுக்காக அனந்தகுமார் எப்போது நினைவு கூறப்படுவார்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அனந்தகுமார் மறைவுக்கு ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.