நவராத்திரி தினத்தில் வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள்.

நவராத்திாியின் வரலாறு – மூன்று தேவர்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்ட ஒரு பெண் உருவம் தான் துர்க்கை. 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்ட துர்க்கை சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.

துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்த நாள் தான் விஜயதசமி. ஸ்ரீராமன் நவராத்திரியை அனுஷ்டித்து தான் சீதாதேவியை மீட்டு வந்தார் என்றும் சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தே திரிபுர தகனம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி வழிபாடு நடைபெறும். இதில் சில இடங்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது.

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மை போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் எப்படி அடுக்க வேண்டும் என்ற நியதியை முன்னோர் வகுத்துள்ளனர்.

கீழிருந்து முதல்படி: மரங்கள், செடிகொடிகள் போன்ற ஓரறிவு உயிர்கள் நிறைந்த பூங்காக்களை வைக்கலாம்.

இரண்டாம் படி: நத்தை, அட்டை முதலான மெள்ள ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்களை வைக்கலாம்.

மூன்றாம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்களை வைக்கலாம்.

நான்காம் படி: பறவைகள் முதலானகளை வைக்கலாம்.

ஐந்தாம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை வைக்கலாம்.

ஆறாம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன், குறத்தி முதலான பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகளை வைக்கலாம்.

ஒன்பதாம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பூரண கலசமும் வைப்பார்கள்.

நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான நைவேத்தியம் படைத்து தேவியை வணங்க வேண்டும். மேலும் நவராத்திரியில் பிரதானமாக பார்க்கப்படுவது கோலம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பொருட்கள் கொண்டு கோலமிட வேண்டும்.

முதல் நாள்- அரிசி மாவு கொண்டு பொட்டு கோலம் போட வேண்டும்.
இரண்டாவது நாள்- கோதுமை மாவு கொண்டு கட்டம் கோலம் போடவும்.
மூன்றாவது நாள்- முத்து வைத்து மலர் வகை கோலம்.
நான்காவது நாள்- அட்சதை கொண்டு படிக்கட்டு வடிவ கோலம்.
ஐந்தாவது நாள்- கடலை கொண்டு பறவையினம் போல.
ஆறு நாள்- பருப்பு கொண்டு தேவியின் நாமம்.
ஏழாவது நாள்- மலரால் திட்டாணி வகை கோலம்.
எட்டாவது நாள்- காசு கொண்டு பத்மம் கோலம்.
ஒன்பதாவது நாள்- பச்சைக் கற்பூரம் கொண்டு ஆயுதக் கோலம்.

கொலு வைக்கும் வழக்கம் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன புதிய பொம்மைகள் இடம் பெறுகிறது. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்திய தட்பவெட்ப நிலைப்படி புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதாங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் கொடுத்து உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்று மருத்துவ ரீதியாகவும் குறிப்பிடப்படுகிறது.