மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமேலவை (Maharashtra Legislative Council) தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்து உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இங்கு சமீபத்தில் சட்டப்பேரவை மேலவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 78 மேலவை இடங்களில், 66 இடங்கள் தேர்தல் மூலமும், 12 இடங்கள் ஆளுநர் நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதில் காலியாக இருந்த அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆசிரியர்கள் தொகுதிகளுக்கும் கடந்த 1 ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, துலே நந்துபர் தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் 5 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அமராவதியில் போட்டியிட்ட சிவசேனா, சுயேச்சை வேட்பாளரிடம் தோற்றது. புனே ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் முக்கிய தொகுதியாக எதிர்பார்க்கப்பட்டது நாக்பூர் தொகுதி. இது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் தலைமையிடம் அங்கு தான் அமைந்துள்ளது. மேலும், பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசின் சொந்த ஊர். பாஜவின் கோட்டையா திகழ்ந்து வந்த நாக்பூர் சுமார் 58 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது காங்கிரஸ் வசம் சென்றுள்ளது.
இந்த தொகுதியில் தற்போது பாஜக வேட்பாளர் தோல்வியை தழுவியது இந்திய அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் வான்ஜாரி வெற்றி பெற்றுள்ளார். இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் வன்ஜாரி 61,701 வாக்குகளும், பாஜ வேட்பாளர் சந்திப் ஜோஷி 42,791 வாக்குகளும் பெற்றனர்.
இங்கு தோல்வியை தழுவிய பாஜ வேட்பாளர் சந்திப் ஜோஷி, தற்போது நாக்பூர் மாநகர மேயராக பதவி வகித்து வருகிறார். அதுபோல, நாக்பூர் சட்டமேலவை தொகுதியில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பலமுறை எம்எல்சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாக்பூர் தொகுதி படுதோல்வி பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஆதரவு வாபஸ்; ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்